செங்கல்பட்டு : மாமல்லபுரத்தில், கலை பொருட்கள் விற்பனை செய்யும், கடையில் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்த சுவாமி சிலைகளை, பதுக்கி வைத்திருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. திரு. ஜெயந்த் முரளிக்கு, தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கூடுதல் எஸ்.பி. திரு. அசோக் நடராஜன், தலைமையிலான காவல்துறையினர், மாமல்லபுரத்தில் முகாமிட்டு சம்பந்தப்பட்ட கடையை, ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. திடீரென கடைக்குள் புகுந்து சோதனை செய்தனர். அங்கு பார்சல் செய்யப்பட்ட நிலையில் இருந்த பஞ்சலோகத்திலான இரண்டு பார்வதி சிலைகள், மற்றும் ஒரு நடனமாடும் சிவன், என மூன்று சிலைகளை மீட்டனர்.
இவற்றின் மதிப்பு 2.50 கோடி, ரூபாய். கைப்பற்றப்பட்டுள்ள மூன்று சிலைகளும், தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை. அக்கோவில்களை அடையாளம் காணும், பணி நடந்து வருகிறது. மேலும் மூன்று சிலைகளும் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டவை என்பதும் உறுதியாகி உள்ளது. ஆனால் இது பழைமையானதா, என்பது குறித்து ஆய்வு நடக்கிறது. இதனால் கடையின் உரிமையாளர் பெயரை, காவல்துறையினர், வெளியிடவில்லை. அவர் உட்பட இருவரிடம் சிலைகள் எப்படி கிடைத்தன, அதன் பின்னணி என்ன என்பது, குறித்து காவல்துறையினர், விசாரித்து வருகின்றனர்.