திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களில் பொதுமக்கள் தவற விட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு காவல்துறையில், பொதுமக்கள் புகார் அளித்தனர். மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்தநிலையில் மாவட்ட காவல் சூப்பிரண்டு திரு. சசாங் சாய், விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சைபர் கிரைம் காவல் துறையினர், தீவிர முயற்சி மேற்கொண்டு தேடுதல் பணியில், ஈடுபட்டனர்.
இதில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 47 செல்போன்களை காவல் துறையினர், மீட்டனர். திருப்பூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை, மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட சூப்பிரண்டு சசாங் சாய், செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார். சைபர் கிரைம் கூடுதல் காவல் சூப்பிரண்டு திரு.கிருஷ்ணசாமி, காவல் ஆய்வாளர் திருமதி. சித்ராதேவி, காவல் உதவி ஆய்வாளர் திரு. ரோஸ்லின் அந்தோணியம்மாள், மற்றும் காவல் துறையினர், உடனிருந்தனர். செல்போன்களை பெற்றவர்கள் மாவட்ட காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.