சென்னை: ஸ்ரீகுமரன் தங்கநகை மாளிகையில் மாதாந்திர தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் செலுத்திய தொகை சுமார் ரூ 1.12 கோடி பணத்தை கையாடல் செய்த நகைக்கடை ஊழியர் பிரபு என்பவர், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். CCB team of Greater Chennai Police arrested Prabu who cheated Rs 1.12 crores paid by the public in the monthly gold jewellery savings scheme at Sree Kumaran Gold shop. சென்னை ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நகைக்கடையில் மாதாந்திர தங்கநகை சேமிப்பு சீட்டு திட்டத்தில் பொது மக்கள் மாதாந்திர தவணையாக ரூ.500/-, ரூ.1000/-, ரூ.2000/- மற்றும் ரூ.5000/- என பணம் செலுத்தி வந்தனர். இந்த திட்டமானது 11 மாதம் முடிந்தவுடன் சேமிப்பு தொகைக்கேற்ப தங்க நகைகளை சலுகை விலையில் வாங்கும் வகையில் ஸ்ரீகுமரன் தங்கநகை மாளிகையின் தி.நகர், வேளச்சேரி, குரோம்பேட்டை மற்றும் திருவள்ளுர் ஆகிய கிளைகளில் செயல்பட்டு வந்தது.
மாதாந்திர தங்கநகை சேமிப்பில் சேர்ந்து பணம் செலுத்திய பொதுமக்கள் திட்ட காலம் முடிந்தவுடன் தங்க நகையை பெறுவதற்காக கடைக்கு வந்து கேட்டபோது அவ்வாறு அவர்கள் செலுத்திய பணம் கம்ப்யூட்டரில் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டு, வங்கியில் வரவு வைக்கப்படாமல் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேற்படி சம்பவம் குறித்து ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் மேலாண்மை இயக்குநர்களில் ஒருவரான திரு.ரவீந்திரன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களிடம் கொடுத்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, ஆவணங்கள் நம்பிக்கை மோசடி பிரிவில் (EDF-II) வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆவணங்கள் நம்பிக்கை மோசடி பிரிவின் உதவி ஆய்வாளர். தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில், மேற்படி நகைக்கடையின் ஊழியர்கள் சிவானந்தம், பூபதி, ஸ்டாலின், பிரபு மற்றும் வேல்முருகன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, தங்கநகை சேமிப்புத் திட்டத்தில் பொதுமக்களிடம் இரு்ந்து பெறப்பட்ட பணத்தை நகைக்கடையின் வங்கி கணக்கில் செலுத்தாமல் சுமார் ரூ.1,12,19,214/- கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் தீவி விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த மேற்படி வழக்கின் முக்கிய குற்றவாளியான நகைக்கடை ஊழியர் பிரபு (வ/31) நாமக்கல் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.