வேலூர் : கோவை காந்தி பார்கை சேர்ந்த, நகை பட்டறை உரிமையாளர் ரகுராம், (44), சென்னையில் உள்ள சில நகை கடைகளுக்கு, ஆர்டரின் பேரில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை, மாரிமுத்து, (30), அய்யனார், (24), ஆகிய ஊழியர்களிடம் இவர் கொடுத்தனுப்பினர். நகைகளை எடுத்துக் கொண்டு கோவையிலிருந்து, சென்னைக்கு செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் , முன்பதிவு செய்த பெட்டியில் ஊழியர்கள் சென்றனர். கடந்த 4 ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த போது, கேரளா மாநிலம், கண்ணனுார் குர்பா, பகுதியை சேர்ந்த அஷ்ரப், (30), சூரஜ், (26), ஆகியோர் மயக்க ஸ்பிரேயரை, மாரிமுத்து, அய்யனார் முகத்தில் அடித்து நகை பெட்டியை கொள்ளையடிக்க முயன்றனர்.
அவர்கள் நகை பெட்டியை கையில் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ரயில்வே போலீசார் அஷ்ரப், சூரஜ் ஆகியோரை கைது செய்தனர். ஜோலார்பேட்டை, ரயில்வே காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்ட , வணிகவரி குழுவினர் சுப்பராயன் தலைமையில், 8 பேர் கொண்ட குழுவினர் நகைகளின் தரத்தை, இன்று ஆய்வு செய்தனர். அதில் அனைத்தும் தங்க நகைகள், 8 கிலோ 554 கிராம், எடை இருந்தது தெரியவந்தது. நகைகள் வணிகவரித்துறையில், ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முறையான கணக்கு உள்ளதா என ஆய்வு செய்த , பிறகே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும். என ரயில்வே காவல் துறையினர், கூறினர். இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த, கோவையை சேர்ந்த நகை வியாபாரி ராஜூவை, (40), காவல் துறையினர், தேடி வருகின்றனர்.