சென்னை : போலி கப்பல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில், மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவிராஜ், டேனியல், புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக்மாரி விஜயமுருகப்பா ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவல் துறையினர், கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 188 பவுன் நகைகள், ரூ.58 லட்சம் ரொக்கம், 2 கார்கள், கணினி மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய, மாநில அரசுத்துறைகளில், வேலைவாங்கி தருவதாக கூறி போலி அரசு முத்திரை, போலி பணி நியமன ஆணைகளை வழங்கி 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடிக்கு மேல் பணம் வசூலித்து, மோசடி செய்த நன்மங்கலத்தைச் சேர்ந்த ரேணுகா, அவரது கணவர் ரஞ்சித் உள்பட 11 பேரை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் துறையினர், சமீபத்தில் கைது செய்தனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு பெயரில் போலியாக நேர்முகத்தேர்வு நடத்தி அரசு பணிகளை வாங்கிதருவதாக கூறி, ரூ.2.5 கோடி மோசடி செய்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.