விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ளது ஊராம்பட்டி. சிவகாசி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராம்பட்டி பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள், ஊரின் அருகேயுள்ள பர்மா காலனி பகுதியின் மேய்ச்சல் புறம்போக்கு இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேய்ச்சல் புறம்போக்கு இடத்தில், 18 பஞ்சாயத்துகளுக்கு சேர்த்து சுமார் 223, வீடுகள் கட்டித்தர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேய்ச்சல் இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அந்தப்பகுதி மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி, அந்தப்பகுதியில், கட்டிடம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராம்பட்டி மக்கள் திரண்டுவந்து, கட்டுமானப்பணிகள் நடந்துவரும் பகுதிகளில், அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சிவகாசி வருவாய்த்துறை அதிகாரிகள் அந்தப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வேறு இடத்தில், மேய்ச்சல் இடம் ஒதுக்கி தருவதாக அதிகாரிகள் கூறியதை, அந்தப்பகுதி மக்கள் ஏற்க மறுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி