கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர பஸ் நிலையம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சில இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. ஆகவே இந்த பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்களை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.
இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்க இருப்பதாலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும் கடலூர் நகரில் போக்குவரத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். அதன்படி சிதம்பரம், விருத்தாசலம் வழியாக வரும் பஸ்கள் இம்பீரியல்ரோடு ஜவுளிக்கடை வழியாக எஸ்.என்.சாவடி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்புறமாக நுழைந்து பஸ் நிலையத்துக்கு சென்று, மீண்டும் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.
திருவந்திபுரம் செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் வண்டிப்பாளையம் சந்திப்பு வந்து, இடது புறமாக திரும்பி சங்கரநாயுடு தெருவழியாக செல்ல வேண்டும். திருவந்திபுரம் வழியாக வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் புதிய போலீஸ் நிலையம் சந்திப்பு வந்து வரதராஜபெருமாள் கோவில் வழியாக போடிச்செட்டி தெரு, வண்டிப்பாளையம் சந்திப்பு வழியாக அவர்கள் செல்லும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
அண்ணா பாலம் சந்திப்பில் இருந்து செல்லும் அனைத்து ஆட்டோக்களும் உழவர் சந்தை, ஜவுளிக்கடை, எஸ்.என்.சாவடி, ரெயில்வே மேம்பாலம் கீழ்புறமாக வந்து பஸ் நிலைய ஆட்டோ நிறுத்தம் செல்ல வேண்டும். பின்னர் அங்குள்ள தியேட்டர் வழியாக வெளியே செல்ல வேண்டும். திருவந்திபுரத்தில் இருந்து செம்மண்டலம் செல்பவர்கள் கூத்தப்பாக்கம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நவநீதம்நகர், ரெயில்வே கேட் அருகில் இருக்கும் நகராட்சி குப்பைமேடு, திருமண மண்டபம் வழியாக செல்ல வேண்டும்.
செம்மண்டலத்தில் இருந்து வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் கம்மியம்பேட்டை புறவழிச்சாலை, அண்ணாபாலம் சந்திப்பு வந்து, அவர்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல வேண்டும். செம்மண்டலத்தில் இருந்து திருவந்திபுரம் செல்லும் இலகுரக வாகனங்கள் கம்மியம்பேட்டை பாலம், திருமண மண்டபம், நகராட்சி குப்பைமேடு, நவநீதம் நகர், ரெயில்வே கேட் மற்றும் கூத்தப்பாக்கம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக திருவந்திபுரம் செல்ல வேண்டும்.இந்த போக்குவரத்து மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதையொட்டி முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் கூறினார்.
அதைத்தொடர்ந்து முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து மாற்றம் குறித்து பதிவாகி வரும் காட்சிகளை திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் பார்வையிட்டார். அவருடன் காவல் ஆய்வாளர் திரு.சரவணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.குமார், உதவி-ஆய்வாளர் திரு.சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.