கோவை : முதல்வர் திரு. ஸ்டாலின், அன்னூர் வருவதை முன்னிட்டு, ஏற்பாடுகள் குறித்து கோவை கலெக்டர் ஆய்வு செய்தார். ஊட்டியில் மலர் கண்காட்சி, வரும் 20ம் தேதி துவங்குகிறது. மலர் கண்காட்சியை முதல்வர் திரு. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து 19ம் தேதி கோவை வருகிறார். முதல்வர் திரு. ஸ்டாலின் கோவை மாவட்டம், அன்னூர் அருகே பெரிய புத்தூரில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண், வளர்ச்சித் திட்டத்தில் புதிய போர்வெல்களை இயக்கி துவக்கி வைக்கிறார்.
பெரிய புத்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில், விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையினரும், செய்து வருகின்றனர். இதையடுத்து தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் போர்வெல்கள், அமைய உள்ள மதுவாணன், குட்டையை கோவை ஆட்சியர் திரு.சமீரன், நேற்று ஆய்வு செய்தார். முதல்வர், விவசாயிகளுடன் கலந்துரையாடும், நிகழ்ச்சி நடைபெற உள்ள பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தையும், ஆய்வு செய்தார். ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி .லீலா, திரு. அலெக்ஸ், வேளாண் இணை இயக்குனர் திருமதி. சித்ரா தேவி, மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.