சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் கூறுகையில், ”முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூகஊடகங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கைது மற்றும் கடுமையன நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை பரப்பப்பட்ட வதந்திகளால் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பத்திரமாக செல்லுமாறு அறிவுறுத்தி, முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பினர். இதன் தொடர்ச்சியாக (வியாழக்கிழமை) பிற்பகல் தொடங்கி பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.