கடலூர்: புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன் (45) முன்னாள் கவுன்சிலரான இவர், புதுச்சேரி அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர். கடந்த 3–ந்தேதி கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை, முன்விரோத தகராறில் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில் பண்ருட்டி திருவதிகை ஜெயராஜ், புதுச்சேரியை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 9 பேரை ரெட்டிச்சாவடி காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தவிர நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழிப்பறி சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இரவு ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பட்டியலில் உள்ள ரவுடிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 46 காவல் நிலையங்களிலும் பட்டியலில் உள்ள ரவுடிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். கடலூரில் நேற்று முன்தினம் வண்ணாரப்பாளையம் கே.டி.ஆர். சுதாகர் (27) பண்ருட்டி திருவதிகை ரஞ்சித்குமார் (30) ஆகிய 2 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று பண்ருட்டியில் குமார் (39) கிருஷ்ணமூர்த்தி (23) கம்மாபுரத்தில் சுந்தரவேலு (33) தெற்கிருப்பு ராஜ்குமார் (29) ஆகிய 4 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் கூறுகையில், ரெட்டிச்சாவடி பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த வீரப்பன் என்பவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது வரை 50 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும். அதேபோல் திருட்டு, வழிப்பறி கொள்ளையை தடுக்கவும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் கூறினார்.