கடலூர்: நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தின் தலைநகரான கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலெக்டர் ராஜேஷ் தேசியக்கொடி ஏற்றுகிறார்.
இதே போல், மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் வெடிகுண்டு சோதனை நடத்தினர். இதில் மைதானம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது. கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்திலும் ரெயில்வே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கடலூர் துறைமுக ரெயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இதே போல், மாவட்டத்தின் பெரிய ரெயில் நிலையமான விருத்தாசலம் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு பயணிகளின் உடைமைகளை சரிபார்த்த பிறகே ரெயில் நிலையத்திற்குள் பயணிகளை அனுமதித்தனர். மேலும், ரெயில் நிலையத்திற்குள் சந்தேகப்படும்படியாக யாரேனும் சுற்றித்திரிகின்றனரா? என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.