செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில், 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டி நடைபெற உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில், 10 ஏக்கர் நிலத்தில், தற்காலிக வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. திருமதி. சத்தியபிரியா, போட்டி நடைபெற உள்ள ஓட்டல் வளாகத்திற்கு வருகை தந்தார். அங்கு ஒவ்வொரு வாகனமும் இடையூரின்றி நிற்கவும், வெளியேறவும், தக்க பாதையுடன் நிறுத்துமிடம் ஏற்படுத்துவது, அந்த வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் எப்படி வெளியேறுவது, அதற்கான வழிகளை எப்படி ஏற்படுத்துவது என்றும் அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.
மேலும் திருட்டு சம்பவங்கள் மற்றும் சந்தேக நபர்களின், நடமாட்டங்களை கண்காணிக்கும் வகையில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது அவருடன் செங்கல்பட்டு மாவட்ட காவல் சூப்பிரண்டு திருமதி. சுகுணாசிங், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு. சிவசண்முகசுந்தரம், மாமல்லபுரம் துணை காவல் சூப்பிரண்டு திரு. ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் திரு. ருக்மாங்கதன், ஆகியோர் வந்திருந்தனர்.