கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை ரெயில்வே பீடர் சாலையை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் திருவேங்கடம்(16). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். திருவேங்கடம் பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். கடந்த 3-ந் தேதி காலையில் வல்லம்படுகையில் இருந்து சிதம்பரத்துக்கு சென்ற அரசு பஸ்சில் திருவேங்கடம் ஏறினார். சிதம்பரம் மந்தக்கரை பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்தபோது திருவேங்கடம் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இது குறித்து பால்ராஜ், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கடந்த 3-ந் தேதி அரசு பஸ்சில் பயணம் செய்தபோது வல்லம்படுகை மாணவர்களுக்கும், திட்டுகாட்டூர் பகுதி மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதும், ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டதும், அப்போது நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் ஒருவர், திருவேங்கடத்தின் மார்பில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பிளஸ்-2 மாணவரை காவல்துறையினர் தேடினர். இது பற்றி அறிந்ததும் அந்த மாணவர், சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் சரணடைந்தார். இதையடுத்து அவர், அந்த மாணவரை சிதம்பரம் நகர னாவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து மாணவர் திருவேங்கடம் சாவு வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றினர். பின்னர் திருவேங்கடத்தை அடித்துக் கொலை செய்ததாக, பிளஸ்-2 மாணவரை காவல்துறையினர் கைது செய்து, கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.