கரூர் : கரூர் அருகே உள்ள தோரணக்கல் பட்டி பகுதியில், இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாம் அமைக்க உள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அப்பகுதியில் வசித்து வரும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அங்கு அகதிகள், மறுவாழ்வு முகாமை அமைக்க கூடாது எனவும், அவ்வாறு அமைக்கும்போது அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனவும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9-ந்தேதி எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டியும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதனையடுத்து காவல்துறையினர், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் தோரணக்கல்பட்டி பகுதிக்கு பொக்லைன் உள்ளிட்ட எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இலங்கை அகதிகளுக்கான, மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று இங்கு இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் அமைக்க கூடாது எனவும், சம்பந்தப்பட்ட இடம் தனி நபருக்கு சொந்தமான பட்டா இடம் எனக் கூறி பணியை தடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக தாந்தோணிமலை காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சத்தியமூர்த்தி, ஏகாம்பரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்து கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.