தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் மதுவிலக்கு சம்மந்தப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் ஏலம் விடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மத்திய பாகம், தென்பாகம், தாளமுத்து நகர், தெர்மல் நகர், குளத்தூர், ஆத்தூர், தட்டப்பாறை, கோவில்பட்டி கிழக்கு, குலசேகரப்பட்டிணம், சாத்தான்குளம், சங்கரலிங்கபுரம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திக்குளம், ஆறுமுகனேரி, தூத்துக்குடி மதுவிலக்குப்பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்குப் பிரிவு ஆகிய காவல் நிலையங்களில் மதுவிலக்கு சம்மந்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட இரண்டு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் கடந்த 30.07.2019 அன்று பகிரங்க ஏலம் விடப்பட்டது.
இதில் 10 வாகனங்கள் மட்டுமே பொது மக்கள் ஏலத்தில் எடுத்தனர். மறுபடியும் மீதம் உள்ள 2 ஆட்டோக்கள் உட்பட 47 இரு சக்கர வாகனங்களை 29.08.2019 பகிரங்க ஏலம் விடப்படுவதாக மறு விளம்பரம் செய்யப்பட்டது. அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், உதவி ஆணையர், கலால் பிரிவு சுகுமார், அரசு தானியங்கி பணிமனை பொது முதலாள் டேனியல் ராஜதுரை ஆகியோர் முன்னிலையில ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அனைத்து வாகனங்களையும் பொது மக்கள் ஏலத்தில் எடுத்துவிட்டனர்.
இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை தலைமை காவலர்கள் காசி ராஜன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.















