கரூர் : தோகைமலை, அருகே உள்ள ஆர்ச்சம்பட்டி, பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக, பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் குளித்தலை ஆர்.டி.ஓ. திருமதி. புஷ்பாதேவி, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை, ஆர்ச்சம்பட்டி மயான பகுதியில் நங்கவரம் வருவாய் அதிகாரி திருமதி.புவனேஸ்வரி, கிராம நிர்வாக அதிகாரிதிரு. ராஜலிங்கம், தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மணலை டிப்பர் லாரியில், ஏற்றிக் கொண்டு இருந்தனர். வருவாய் துறையினரை கண்டதும் அவர்கள், பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை அங்கேயே விட்டு தப்பி ஓடினர். இதனைத்தொடர்ந்து டிப்பர் லாரி, மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்த, அதிகாரிகள் தோகைமலை காவல்துறை நிலையத்தில், ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை, வலைவீசி தேடி வருகின்றனர்.