கரூர் : கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கோடங்கிப்பட்டி பகுதியை, சேர்ந்தவர் அமிர்தலிங்கம், இவரது மனைவி முத்துலட்சுமி, (22), இருவரும் டெய்லர். இவர்களது மகன் கனிஷ், (4), இந்நிலையில் கடந்த மாதம், முத்துலட்சுமி டெய்லர் வேலை செய்து கொண்டிருந்தபோது, கத்தரிகோலை எடுத்து, கனிஷ் கண்ணை குத்தி கொண்டார். இதனால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கனிஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் கனிஷ்க்கு கண்ணில், ஆபரேஷன் செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனால், மனமுடைந்த முத்துலட்சுமி, நேற்று முன்தினம் இரவு, அருகில் உள்ள சிதம்பரம், என்பவருக்கு சொந்தமான கிணற்றில், மகன் கனிஷ் உடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் நேற்று, முத்துலட்சுமி, கனிஷ் உடல்களை கிணற்றிலிருந்து மீட்டு, கரூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனுடன், தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கோடங்கிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை, ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தான்தோன்றிமலை காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.