சென்னை : பணியின் போது உயிர் இழந்த காவலர்களுக்கு இன்று (அக்டோபர் 21) நினைவஞ்சலி தேசிய அளவில் அனுசரிக்கப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், சீனப் படையினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் கைது செய்யப்பட்டனர், மீதமுள்ளவர்கள் தப்பினார்கள். மூன்று வாரங்களுக்குப் பின்னரே இறந்த காவலர்களின் உடலை சீனர்கள் திரும்பி அனுப்பினர்.
1960 ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 21 ம் தேதி காவலர் வீர வணக்க நினைவு நாள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லடாக் பகுதியில் கொல்லப்பட்ட காவலர்களும், பணியின் போது கொல்லப்பட்ட அனைத்து காவல் அதிகாரிகளும், காவலர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த நினைவு நாள் அனுசரிக்கப்படுகின்றது.
தேசிய காவலர் தினம் டிசம்பர் 24 இயக்கத்தின் நிறுவனர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழின் முதன்மை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் இன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் பொதுமக்களுககு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களை 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு சுவரொட்டிகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உயிர் இழந்த காவலர்களின் ஆன்மாவிற்காக இன்று கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது.