சென்னை: காவல் துறையினருக்கான கேன்டீனில் கொள்முதல் செய்யும் பொருட்களின் மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், காவலர்கள் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான பண வரம்பும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் டி.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில அளவிலான தமிழ்நாடு காவல் கேன்டீன் கமிட்டி தீர்மானத்தின்படி காவல் கேன்டீனில் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை ரூ.5 ஆயிரத்துக்குப் பதில் ரூ.7 ஆயிரத்து 500 வரை மாதந்தோறும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் டிஎஸ்பி வரை ரூ.8 ஆயிரத்துக்குப் பதில் ரூ.10 ஆயிரம் வரை மாதந்தோறும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
காவல் கண்காணிப்பாளர் முதல் அதற்கு மேலான பதவியில் உள்ள காவல் அதிகாரிகள் ரூ.10 ஆயிரத்துக்குப் பதில் ரூ.15 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.
அதுபோல முறையே ஆண்டுதோறும் கொள்முதல் செய்யும் பொருட்களின் மதிப்பு அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.70 ஆயிரம் ரூ.1 லட்சமாகவும், ரூ.1 லட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாகவும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூ. 2 லட்சத்து 550 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.