திருநெல்வேலி : கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட போலி மருத்துவர் கைது. 18.02.2022 வள்ளியூர் உட்கோட்டம், உவரி காவல் நிலைய சரகம், பெரியதாழை பகுதியில் தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவகுடியைச் சேர்ந்த தனசேகரன் என்பவரின் மகன் சிலம்பரசன்(32),என்பவர் அமுதசேகர் எலக்ட்ரோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்னும் பெயரில் அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அலோபதி மருத்துவம் செய்தும் மருத்துவக் கல்லூரிக்கு அட்மிஷன் நடந்து கொண்டிருக்கிறது என்று பொய்யாக விளம்பரப்படுத்தி அப்பகுதி மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு., இ.ஆ.ப, அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப, அவர்கள் மேற்படி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உவரி காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். உத்தரவின் பேரில் திசையன்விளை காவல் ஆய்வாளர் திரு.ஜமால்,(பொ), மற்றும் திருநெல்வேலி மாவட்ட நலப்பணிகள் துறை துணை இணை இயக்குனர் திரு.ஜான்பிரிட்டோ ஆகியோர், சம்பவ இடம் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் எலக்ட்ரோபதி பட்டதாரியான சிலம்பரசன், அலோபதி முறைப்படி மருத்துவம் செய்து.
மக்களை ஏமாற்றி வந்ததும், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எலக்ட்ரோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளதாகவும் அங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும் பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மீது கொலை வழக்கு உட்பட 11 வழக்குகள் உள்ளது எனவும் குற்ற சரித்திர பதிவேடு உள்ள எதிரி என்பதும் தெரியவந்தது.
மேற்படி நபர் மீது திருநெல்வேலி மாவட்ட நலப்பணி துறை இணை இயக்குனர் திரு.ஜான்பிரிட்டோ, அவர்கள் உவரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.ஜமால், அவர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி போலி மருத்துவர் சிலம்பரசனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.