கன்னியாகுமரி : ஏப். 26, நாகர்கோவில் அருகே மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அம்பேத்கர் சிலை முன் தர்ணா போராட்டம். நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. குமரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் குளக்கரை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. நாகர்கோவிலில் பறக்கிங்கால்வாய், பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பதிசாரம், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வீடுகளை இடிப்பதை உடனே நிறுத்த வேண்டும். நிலமில்லாத ஏழை மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நிலம் எங்கள் உரிமை இயக்கம் உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் சார்பில் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம், அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுத்திருந்தனர்.
இதையடுத்து நேற்று காலை முதல் அம்பேத்கர் சிலை முன் டி.எஸ்.பி. திரு. நவீன் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திரு. திருமுருகன், திரு. திருநாவுக்கரசு, திரு. முத்துராஜ், மீனா மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பதிசாரம், தேரேகால்புதூர், கீழ தத்தையார் குளம், தத்தையார் குளம், நுள்ளிக்குளம், தாழக்குடி, தாழக்குடி தோப்பூர் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அம்பேத்கர் சிலை முன் குவிந்தனர். விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நிலம் எங்கள் உரிமை இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.
அவர்களுடன் டிஎஸ்பி திரு. நவீன் குமார், தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தரப்பில், மாற்று இடம் வழங்கி விட்டு வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசெல்ல, மறுத்ததால் அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொது மக்கள் கலைந்து செல்ல மறுத்து அம்பேத்கர் சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஏ.டி.எஸ்.பி. திரு. ஈஸ்வரன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் தரப்பில் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் வந்து தங்களிடம், கோரிக்கை மனு பெற்று உறுதிமொழி அளித்தால் தான் கலைந்து செல்வோம் என்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் தீக்குளிக்க போகிறேன் என கூறினார். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். அப்போது அவரை விடாமல் போராட்டக்காரர்கள் பிடித்து இழுத்தனர். இதனால் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்கும், இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அம்பேத்கர் சிலை முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.