சென்னை : சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (11.06.2022), மதியம், நாகூரான் தோட்டம் பள்ளம் அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படுமபடி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்தபோது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களை சோதனை செய்தபோது, போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக போதை மாத்திரைகள், வைத்திருந்த 1.ஸ்டீபன் (எ) மூணுதலை ஸ்டீபன் (21), எண்ணூர், முத்து (எ) தேசமுத்து, (21), காசிமேடு, ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 MDMA என்ற போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், எதிரிகள் இருவரும் N-2 காசிமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், இதில் ஸ்டீபன் மீது 1 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 7 குற்ற வழக்குகளும், தேசமுத்து மீது 1 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர், இன்று (12.06.2022) நீதிமன்றத்தில், ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.