மதுரை : மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் பிரிவு, சிவதானபுரம் என்ற இடத்தில் மாயழகன், என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில், இரண்டு கூரை அமைக்கப்பட்டு சுமார் 4500 க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து, மின்சாரம் வந்த போது அதிக மின் அழுத்தம் காரணமாகவும் மின் கசிவு ஏற்பட்டதால், திடீரென தீ பற்றி மளமளவென்று எரிந்தது. இதனால், அங்கு பணியில் என்ன ,இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். தொடர்ந்து, சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வாகனம் மற்றும் சுற்றுவட்டார, பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்தன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே மின்கசிவு ஏற்பட்டு பொருட்கள் சேதம் அடைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் ஒருவித, கிலியை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், கறிக்கோழி வளர்ப்பவர்கள் ஏற்கனவே, நலிவடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விபத்துகளால் மேலும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் . மேலும் ,கறிக்கோழி வளர்ப்பு நல வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.