விருதுநகர்: சிவகாசியில், மனிதவள மேம்பாட்டு மையத்தில் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மனிதவள மேம்பாட்டு மையம் நிறுவனத்தில், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன உதவியுடன் சிறுதானிய உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்புக்கூட்டும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் 50 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சியை முடித்தனர். பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, சர்வதேச மகளிர் தினவிழா மற்றும் புதிய மாத பத்திரிக்கை வெளியீட்டு விழா என்ற முப்பெரும் விழா, சிவகாசி – விஸ்வநத்தம் சாலையில் உள்ள ஹெச்.ஆர்.எப். மனிதவள மேம்பாட்டு மைய நிறுவனத்தில் நடைபெற்றது.
திட்ட இயக்குனர் விஜயகுமார் தலைமையில், திட்ட அலுவலர் கார்த்திகேயன் முன்னிலையில், பயிற்சியை முடித்துள்ள மல்லிகா வரவேற்று பேசினார். இந்த முப்பெரும் விழாவில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி தமிழ்துறை தலைவர் பொன்னி, ஆர்.எம்.ஜே. கேட்டரிங் கல்லூரி பேராசிரியர் கார்த்திகாதேவி, தனியார் நிறுவன உரிமையாளர் சரஸ்வதி உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் பேசும்போது, சிவகாசி பெரும் தொழில் நகராக இருந்து வருகிறது. சிவகாசி என்று அழைப்பதைவிட அநேகம்பேர் இதனை குட்டி ஜப்பான் என்று தான் கூறுகின்றனர். சிவகாசி மாநகரின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநகராட்சி வளர்ச்சிக்கென 10 கோடி ரூபாய் நிதியாக அறிவித்துள்ளார்.
முதல் வேலையாக சிவகாசி பகுதியில் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும், தடையில்லாமல் குடிநீர் வசதிகள் செய்யப்படும், தொழில்கள் வளர்ச்சிக்கு தேவையான சாலை வசதிகள் விரிவாக்கப்படும் என்று கூறினார். மேலும் சிவகாசி பகுதி மக்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன், பொதுமக்கள் தங்கள் பகுதியின் குறைகளை எப்போதும் தன்னை நேரில் சந்தித்து கூறலாம். மேயராக தன்னை தேர்வு செய்த கட்சி தலைமைக்கும், சிவகாசி பகுதி மக்களுக்கும் என்றும் நன்றியுள்ளவராக இருப்பேன் என்று பேசினார். நிறைவாக பயிற்சி முடித்த 50 பெண்களுக்கு, திட்ட இயக்குனர் விஜயகுமார், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.