அரியலூர் : அரியலூரில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தில், 1983-ம் ஆண்டு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்து 300 இழப்பீட்டுத்தொகை கொடுத்து 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என உறுதியளித்து நிலத்தை கையகப்படுத்தினர். ஆனால் இதுவரை யாருக்கும் நிரந்தர வேலை வழங்கவில்லை என கூறி அக்கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு நிரந்தர வேலை வழங்கும் வரை சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் ஒரு பிடி மண்ணை எடுக்க அனுமதியளிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மீறி எடுத்தால் நிலம் கொடுத்த விவசாயிகள் அனைவரும் தீக்குளிப்போம் என்று பெட்ரோல் பாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து இரும்புலிக்குறிச்சி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய குடும்பத்தை சேர்ந்த 25 வாலிபர்களை காவல் துறையினர், கைது செய்தனர். பின்னர் அவர்களை இரும்புலிக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.