கடலூர்: கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி காவல் ஆணையர் திரு.திருமலைச்சாமி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை காவல்துறையினர் வழிமறித்து சோதனையிட்டனர்.
சோதனையில் காரின் முன்பக்கம் என்ஜினுக்கு மேல் 4 அட்டை பெட்டிகள் இருந்தது. இதை பார்த்த காவல்துறையினர் அந்த அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்தனர். அதில் 192 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மூலம் போலீசாரின் வாகன சோதனையில் சிக்காமல் தப்பிக வேண்டும் என்று கருதி நூதன முறையில் என்ஜினுக்கு மேல் பகுதியில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவநத்து. இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் விருத்தாசலம் இருப்பு தெற்குதெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் வீரமணி (25) என்றும், அவர் புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக முத்தாண்டிக்குப்பத்துக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து வீரமணியை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து 192 மதுபாட்டில்களையும், அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.