கரூர்: தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட “காவல் உதவி” புதிய செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பங்கேற்றனர். காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும். என்ற முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களையும், தொழில்நுட்ப யுத்திகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும். அவசரம் உதவி பொத்தான் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற “அவசரம்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க “Dial-100” என்ற செயலி “காவல் உதவி” செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும். அலைபேசி வழி / புகார் அளித்தல் (Mobile Based Complaint) – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார்கள், முதியோர்கள் ஆகியோர் அவசர கால புகார்களை, படங்கள்/ குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, புகாரை பதிவு செய்யலாம்.
இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (Location sharing) – பயணங்கள் மேற்கொள்ளும் போது, அவசர காலத்தில் பயனாளர்கள், Whatsapp / Google Map வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர் அல்லது நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.