திருச்சி: திருச்சி மாநகரில் புதிதாக வீடு கட்டுபவர்கள் அதனுடன் கண்காணிப்பு கேமராவை சேர்த்து வைக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநகர பகுதியில் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் தெரிவித்தார். தற்போது வரை 1000 கேமராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணித்து வருவதாக கூறினார்.
ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு
திருச்சி கோட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த ஊழியர்களிடம் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் என்பவரை பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகையா பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் முருகையாவுக்கு திருச்சி காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் வெகுமதி வழங்கினார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநகரில் புதிதாக வீடு கட்டுபவர்கள் அதனுடன் கண்காணிப்பு கேமராவை சேர்த்து வைக்க வேண்டும். அப்போதுதான் திருட்டு சம்பவங்களில் இருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். கேமராக்கள் பொருத்தப்பட்டதால், பெரும்பாலான சங்கிலி பறிப்பு சம்பவங்கள் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஆனால் அதில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிப்பதில் தான் தாமதம் ஏற்படுகிறது. திருச்சியில் முன்பை விட சங்கிலி பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
மாரடைப்பால் சாவு
காந்தி மார்க்கெட் வரகனேரியை சேர்ந்த சூதாட்ட கிளப் உரிமையாளர் சோமசுந்தரம் சாவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது போன்ற ஆதாரங்கள் இல்லை. மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என தெரிகிறது.
செல்போனை தவறவிட்டால்
கடந்த ஆண்டு திருச்சியில் 14 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு 12 கொலைகள் நடந்துள்ளன. மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது செல்போன்களை தவறவிட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வேண்டும். அப்போது தான் செல்போனை கண்டுபிடித்து உரியவரிடம் சேர்க்க முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி