கோவை : கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியில், உள்ள ஒரு பள்ளி வாசல் அருகே எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வழக்கமாக மாதம் ஒரு முறை கொடியேற்றி இறக்குவது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு ஏற்றப்பட்ட எஸ்.டி.பி.ஐ. கொடியை இறக்க கோரி பாரத் அமைப்பினர்ரகளை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி வாசல் அருகே பாரத் சேனா அமைப்பின் நிர்வாகி வாசு என்ற சீனிவாசன் (வயது 42) தலைமையிலான சிலர் அங்கு பாரத் சேனாவின் கொடி கம்பத்தை நட்டு வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர் , 2 கொடி கம்பங்களையும் அங்கிருந்து அகற்றினர். இந்த நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பாரத் சேனா நிர்வாகி சீனிவாசன் மீது காவல் துறையினர் , 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு மேலும் 2 பேரை காவல் துறையினர் , தேடி வருகின்றனர். அதே போல அனுமதியின்றி எஸ்.டி.ஐ.பி. கட்சி கொடிக்கம்பத்தை நட்டிய எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஜாபர் (42), நாகூர்கனி (37), ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.