விருதுநகர் : விருதுநகர் பகுதியைச் சேர்ந்த, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவரிடம், விருதுநகர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவர் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்தார். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய ஹரிஹரன், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். இளம் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதை ஆபாச படமாக எடுத்திருந்ததை ஹரிஹரன், தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இதனை பார்த்த ஹரிஹரனின் நண்பர்கள் ஜுனத்அகமது (27), பிரவீன் (21), 9ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் 4 பேர் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, உனது ஆபாசப்படம் எங்களிடம் இருக்கிறது, எங்களது ஆசைக்கு இணங்காவிட்டால் அதனை சமூக ஊடகத்தில் பதிவிடுவோம் என்று கூறி மிரட்டி அந்த இளம்பெண்ணை தனித்தனியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது குறித்து அந்தப்பெண் தனக்கு அறிமுகமான மாடசாமி (36) என்பவரிடம் கூறியுள்ளார். மாடசாமி அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறுவதுபோல பழகி அவரும் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து பல மாதங்களாக இந்த கொடுமையை அனுபவித்து வந்த அந்த இளம்பெண், இது குறித்து விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இளம் பெண்ணின் புகார் மீது வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து, அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்று கூறி மிரட்டி பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் விருதுநகர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.