கடலூர்: கடந்த மாதம் 26-ந்தேதி சிதம்பரம் பொய்யாபிள்ளை சாவடி குறுக்கு ரோடு அருகில் ஓமக்குளம் கீழக்கரையைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பவர் சென்று கொண்டு இருந்தார். அவரை உசுப்பூர் அம்மாபேட்டையைச்சேர்ந்த முத்துகுமரன் மகன் சிவா என்ற சிவராஜ் (21) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்தார். இது தொடர்பாக சிதம்பரம் தாலுகா காவல் ஆய்வாளர் அம்பேத்கார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். சிவா மீது திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளன.
சிவா தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். அதன்படி சிவா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதேப்போல் கடந்த 7-ந்தேதி பரங்கிப்பேட்டையில் ஜாகிர்உசேன் என்பவரை பி.முட்லூர் மேட்டுத்தெருவைசேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கனகராஜ் (32) என்பவர் வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கொண்டார். இது தொடர்பாக கனகராஜை பரங்கிப்பேட்டை காவல்; ஆய்வாளர் செல்வம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். கனகராஜ் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், பண்ருட்டி, மாயவரம், திண்டிவனம், குன்றத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன. இதனால் அவரை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கனகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை மத்திய சிறையில் உள்ள கனகராஜிடம் வழங்கப்பட்டது.
இதன்படி இவர் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.