சென்னை: சென்னை: தமிழக காவலர் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்க காவலர் நிறைவாழ்வு பயிற்சியை கலைவாணர் அரங்கில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார் என்றார்.
மேலும் நமது காவல்துறை எல்லா காலங்களிலும் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதிலும் நிலைநாட்டுவதிலும் சிறப்பாக செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளை காவல்துறை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் பாராட்டி மொழிந்தார்.
இதைத் தொடர்ந்து என் கடன் என் பணி செய்வதே என்ற ஆன்றோரின் வாக்குப்படி காவல்துறையினர் பணியாற்றுவதாக கூறிய அவர், தீவிரவாதிகளின் நடமாட்டத்தை காவல்துறையினர் தமிழகத்தில் முற்றிலும் முறியடித்துள்ளனர் என்று பெருமிதம் கொண்டார்.
மேலும் தமிழகத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அதனால்தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று தெரிவித்த அவர், காவலர் குடும்பங்களில் அமைதியான சூழல் ஏற்பட நிறைவாழ்வு பயிற்சி உதவும் என்றும் காவல்துறையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்றும் முதல்வர் கூறினார்.
மேலும் முதல்வர் கூறியதாவது,’இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியிலும் உணவு உண்பதற்குக் கூட நேரமின்றி காவல்துறையினர் பணியாற்றுகின்றனர். காவல்துறையின் பணிகளால் சட்டத்தின் மீதும் அரசின் மீதும் மக்களுக்கு மரியாதை ஏற்படுகிறது. காவல்துறையினரின் நலனைப் பேணி பாதுகாக்க தமிழக அரசால் உருவாக்கப்பட்டது தான் நிறைவாழ்வுப் பயிற்சி திட்டம். காவல்துறையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிறைவாழ்வுப் பயிற்சி அளிக்கப்படும்.
நிறைவாழ்வு பயிற்சிக்காக இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காவல்துறையினர் தங்கள் உடல்நலனை பேணிப் பாதுகாக்க வேண்டும். உடற்பயிற்சி, புத்தகங்களை வாசித்தல் உள்ளிட்ட பழக்கங்களை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். தீய ஆதிக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு இடம் கொடுத்து கூடாது. இந்த நிறைவாழ்வுப் பயிற்சியின் மூலமாக காவல்துறையினர், அவர்களது குடும்பத்தினரின் மனநலன் பேணப்பட்டு சிறப்பாக பணியாற்ற வழிவகுக்கும்’ இவ்வாறு முதல்வர் கூறினார்.
விழாவில் பேசிய டிஜிபி ராஜேந்திரன் பணி சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து திறமையாக பணியாற்ற காவலர் நிறைவாழ்வு விழா பெரிதும் உதவும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ராஜேந்திரன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.