தூத்துக்குடி : காவல்துறை பணியின்போது வீர,தீரச்செயல் புரிந்து உயிர் நீத்த காவல் துறையினரின் குடும்பத்தாரை நேற்று (09.01.19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியும், கௌரவித்தும் சான்றுகளை வழங்கினார்.
முதல் நிலை காவலர் முருகன் என்பவர் 16.11.2001 அன்று புதூர் காவல் நிலைய சரகத்தில் தனிப்பிரிவில் பணியாற்றியபோது புதூர் அருகேயுள்ள சல்லிசெட்டிபட்டி, சங்கரலிங்கபுரம் ஊர்களில் உள்ள இரு பிரிவினருக்கிடையே நடந்த வன்முறையை தடுக்கச்சென்ற போலீசாரை வன்முறைக்கும்பல் நாட்டு வெடிகுண்டு, பயங்கர ஆயுதங்கள் மற்றும் கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியதில் முருகன் உயிழந்தார்.
சண்முகச்சடாட்சரம் என்பவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தபோது 08.04.1984 அன்று சமூக விரோதிகளை கைது செய்யச்சென்றபோது தாக்கப்பட்டார்.
இராமச்சந்திரன் என்பவர் காவலராக எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் 13.06.1984 அன்று பணியிலிருந்தபோது, களவு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தபோது தாக்கப்பட்டுள்ளார்.
மந்திரம்பிள்ளை என்பவர் காவலராக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 31.12.1980 அன்று பணிபுரிந்தபோது சங்கரன்கோவில் குறிஞ்சான்குளம் கிராமத்தில் நடைபெற்ற விவசாய போராட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார்.
பழனிதாஸ் என்பவர் 04.05.1962 அன்று நாரைக்கிணறு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியபோது மதுவிலக்கு ரோந்து சென்ற போது சட்ட விரோத கும்பலால் கொல்லப்பட்டுள்ளார்.