கடலுரர்: நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூர் கிராமத்துக்குள் 6 பேர் கொண்ட முகமுடி கும்பல் ஒன்று நுழைந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 2 வீடுகளில் ரூ. 4 லட்சம் நகை பணத்தை கொள்ளையடித்து சென்றது. தொடர்ந்து மறுநாள் மருதாடு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 11½ லட்சம் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்றது. அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்களால் நெல்லிக்குப்பம் பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்தனர். இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமாரின் உத்தரவின் பேரில் நெல்லிக்குப்பம் பகுதியில் போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இந்த நிலையில் போலீசாருக்கு சவால் விடும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லிக்குப்பம் குடிதாங்கிசாவடி சுபம் நகரை சேர்ந்த இளையராஜா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்த பீரோவை உடைத்து 3 பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது. இதனால் பொது மக்கள் மேலும் பீதி அடைந்தனர்.
நெல்லிக்குப்பம் பகுதியை குறிவைத்து தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் முகமுடி கொள்ளையர்களை பிடிக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். காவல்துறையினர் சுந்தரவாண்டி கிராம பகுதியில் சென்றபோது, அங்கு முகமுடி அணிந்தபடி 3 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காவல்துறையினர் பார்த்ததும் உடனே அங்கிருந்த கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து தப்பி ஓடினர். இதையடுத்து அவர்களை பிடிக்க காவல்துறையினர் விரட்டி சென்றனர். ஆனால்முகமுடி கொள்ளையர்கள் சிக்கவில்லை. இருப்பினும் காவல்துறையினர் சுந்தவாண்டி கிராம பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமாரிடம் கேட்ட போது அவர் கூறுகையில்,
நெல்லிக்குப்பம் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கனவே நெல்லிக்குப்பம் பகுதியில் 4 சோதனை சாவடிகள் இருந்தது. தற்போது அதனை 11–ஆக உயர்த்தி தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளையர்களை நெருங்கி விட்டோம் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றார்.