கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தாண்டவன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் மகன் சசிகுமார் என்கிற வெட்டு சசி(26). பிரபல ரவுடி. இவரது அண்ணன் வேல்முருகன்(34). நேற்று முன்தினம் இரவு சசிகுமார் அவரது வீட்டின் முன்பு, கட்டிலில் தூங்கினார். அவருக்கு சற்று தூரத்தில் வேல்முருகனும், வீட்டின் உள்ளே அவர்களது தாயும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
இந்ந நிலையில் நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம் கேட்டு, வேல்முருகன் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தார்.
அப்போது, கட்டிலில் தூங்கிய சசிகுமாரை 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொண்டு இருந்தது.
வேல்முருகன் சத்தம் போட்டவுடன், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். உடன் தனது தம்பியின் அருகே சென்று அவர் பார்த்த போது, உடல் முழுவதும் வெட்டுக்காயம் அடைந்த சசிகுமார் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி இருப்பது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து வேல்முருகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் தெர்மல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சசிகுமார் நெய்வேலி பகுதியில் உள்ள கடைகளில் மாமுல் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதில் பணம் தரமறுப்பவர்களை தான் மறைத்து வைத்து இருக்கும் கத்தியால் வெட்டியும் உள்ளார். இவ்வாறு கத்தியால் வெட்டி பணம் பறித்தல், அடிதடி வழக்கு என்று நெய்வேலி பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் சசிகுமார் மீது பல வழக்குகள் உள்ளன. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் யாரேனும் சசிகுமாரை கொலை செய்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மாஜிஸ்திரேட்டு ஜெயக்குமார் முன்னிலையில், வடக்குவெள்ளூரை சேர்ந்த கணேசன் மகன் ராஜேந்திரன் என்கிற கட்ட ராஜேந்திரன்(40), செடுத்தான்குப்பம் சக்திவேல் மகன் ராஜ்குமார்(30) ஆகியோர் சரணடைந்தனர்.
இந்த கொலை சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.