நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியையேற்றினார். குடியரசு தலைவரான பிறகு இதுவே இவர் கொண்டாடும் முதல் குடியரசு தினமாகும் முதல் முறையாக தேசிய கொடியேற்றினார் ராம்நாத் கோவிந்த்.
முன்னதாக டெல்லி ராஜபாதையில் தேசிய கொடி ஏற்ற வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகளும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறைந்த இந்திய விமானப்படை அதிகாரி ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது.
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் இந்திய ராணுவத்தை பறைசாற்றும் வகையில் ஏவுகணை, பீரங்கிகள் அணிவகுப்பு நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் அணிவகுப்பை கண்டுரசித்து வருகின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்றது.
குடியரசு தின விழாவில், மலேசியா, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 ஆசியான் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். விழாவில் பங்கேற்க வந்த 10 நாட்டு தலைவர்களையும், பிரதமர் மோடி வரவேற்றார்.
டெல்லி காவல், மத்திய பாதுகாப்பு படைகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தென்கிழக்கு ஆசியா கூட்டமைப்புடன் இந்தியா கொண்டுள்ள 25 ஆண்டு கால நட்புறவை குறிக்கும் விதமாக இந்த ஆண்டு ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாக தங்களின் பங்களிப்பை அளித்து வரும் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.