தென்காசி: தென்காசி மாவட்டம், பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக ஒரு புது முயற்சியாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் அறிவுரையின்படி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்களின் தலைமையில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் முன்னிலையில் நேற்று 26.03.2022 தென்காசி ஹவுசிங் போர்டு விளையாட்டுத் திடலில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த வாலிபால் விளையாட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 72 அணியினர் கலந்து கொண்டனர்.
விளையாட்டின் துவக்கமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் இளைஞர்கள் அனைவரும் இந்தியாவின் தூண்கள் எனவும் தீய வழிகளில் செல்லக் கூடாது எனவும் உங்கள் நண்பர்களையும் தீயவழியில் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் காவல்துறை உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும் எந்த ஒரு போதைப் பொருளுக்கும் அடிமையாகாமல் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து உடலையும் மனதையும் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறி விளையாட்டை துவக்கி வைத்தார். இந்த போட்டியின் இறுதி ஆட்டம் இன்று 27.03.2022 நடைபெற்றது.
இதில் சிவகாமிபுரம் அணியினர் முதல் பரிசையும்,தென்காசி மாவட்ட காவல்துறை அணியினர் இரண்டாம் பரிசையும்,தென்காசி well takers அணியினர் மூன்றாம் பரிசையும்,வல்லம் அணியினர் நான்காம் பரிசையும், தென்காசி மாவட்ட காவல்துறை அணியின் காவலர் திரு.சார்லஸ் சிறந்த ஆட்டநாயகன் பரிசினையும் பெற்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அணியினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையினை வழங்கி தனது வாழ்த்து க்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். பொது மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக காவல்துறையின் இத்தகைய முயற்சியை பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்..