திருச்சி : ராசிபுரம் வெங்கடசாமி தெருவை சேர்ந்தஈஸ்வரன், (26), கடந்த மாதம் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து படுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், இரவு, 11:00 மணியளவில், ஈஸ்வரன் தம்பி ஆனந்தவேல் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கே ஈஸ்வரன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ஆனந்தவேல் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் காவல் துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர். எஸ்.பி., திரு. சாய் சரண் தேஜஸ்வி, நேரில் விசாரணை மேற்கொண்டார். ஈஸ்வரனின் நண்பர் ஜெயமணிகண்டன், (28), என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
ஈஸ்வரன் தொடர்ந்து மது வாங்கி கொடுக்க சொல்லி மிரட்டி வந்ததாகவும், அடிமைபோல் நடத்தியதால் ஜெயமணிகண்டன், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். போதையில், இருந்த ஈஸ்வரனை வீட்டில் இறக்கி விட்ட ஜெயமணிகண்டன், வீட்டில் யாரும் இல்லாததால், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதையடுத்து ஜெயமணிகண்டனை காவல் துறையினர், கைது செய்தனர். இந்நிலையில், ஜெயமணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால், இவரை குண்டர் சட்டத்தில், கைது செய்ய எஸ்.பி., பரிந்துரை செய்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர், ஒப்புதல் வழங்கினார். ஜெயமணிகண்டனை குண்டர் சட்டத்தில், ராசிபுரம் காவல் துறையினர், நேற்று கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம், குண்டர் சட்ட கைது குறித்த உத்தரவை காவல் துறையினர், வழங்கினர்.