அரியலூர் : அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (30), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது மனைவியின் உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக அவர்களது வீட்டிற்கு சென்றார். அப்போது தன்ராஜூக்கு உறவுமுறையில், அத்தையான பெண்ணின் கணவர் மதுபோதையில் இருந்ததால் அவர் தன்ராஜூடன் மோட்டார் சைக்கிளில் பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.அப்போது வெண்மான்கொண்டான் என்ற இடத்தில் ஆர்.எஸ்.பதி காட்டில் தன்ராஜ் தனது அத்தையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மகளிர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தன்ராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். அதில், அத்தையை கற்ப்பழித்த மருமகனுக்கு ஆயுள் தண்டனையும், கடத்தி சென்றதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தாக்கியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். நீதிபதியின் தீர்ப்பின் படி ஏக காலத்தில், தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதால் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை தன்ராஜ் அனுபவிப்பார். இதையடுத்து காவல் துறையினர், அவரை பலத்த காவல் பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.