புதுச்சேரி: திருபுவனை பகுதியில் தொழிற்சாலைகளில் ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தொழில் போட்டியில் தொழிலதிபர் வேலழகன் படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையால் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் சில நாட்கள் மூடப்பட்டுக் கிடந்தன.
இதையொட்டி காவல்துறையினர் – தனியார் தொழிற்சாலை, நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகளுக்கான நல்லுறவு கூட்டம் கலித்தீர்த்தாள்குப்பத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு மேற்கு பகுதி காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு.குணசேகரன் தலைமை தாங்கினார். காவல் ஆய்வாளர் திரு.கலைச்செல்வம், உதவி- ஆய்வாளர்கள் திரு.அலாவுதீன், திரு.குமரவேல் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தொழிற்சாலை நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, அரசியல் கட்சிகளின் வேலை நிறுத்த அறிவிப்பின் போதும், ரவுடிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் இறந்து போகும்போதும் தொழிற்சாலைகளை மூடும்படி சிலர் கட்டாயப்படுத்துகின்றனர். உள்ளூரை சேர்ந்த சிலர் விழாக்கள் நடத்துவதாக நன்கொடை வசூலிக்கின்றனர். இதையெல்லாம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தவேண்டும் என்று தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொழிற்சாலை நிர்வாகிகள் இங்கு தெரிவித்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் விரைவில் துப்பு துலங்கவும் அனைத்து தொழிற்சாலைகளின் வாயில் பகுதியிலும், அங்குள்ள சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும். தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்ததாரர்கள் குறித்த விவரங்களை காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும்.
சுமைதூக்கும் தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகமே பணியில் அமர்த்திக்கொள்ள வேண்டும். அவர்களை பற்றிய விவரங்களை பக்கத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு தெரிவிக்கவேண்டும். தொடர்ந்து பிரச்சினைக்கு ஆளாகும் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இரவுநேர பணியில் பெண்களை பயன்படுத்தும் நிறுவனங்கள், அவர்களுக்கு போக்குவரத்து வாகன வசதிகளை சரியாக செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.