தூத்துக்குடி: தீபாவளி பண்டிகையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். இதனால், திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை மாநகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில் “தீபாவளி பண்டிகைக்காக மக்கள் பாதுகாப்பாக பொருட்கள் வாங்கி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்ட சிறப்பு ரோந்து வாகனங்கள், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும். 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த காரில் கேமராவை இயக்கும் வல்லுநர்கள் இருப்பார்கள். ரோந்து செல்லும் போது அவர்கள் கேமரா பதிவுகளை ஆய்வு செய்வார்கள். அதில் சந்தேகப்படும்படியான நபர்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என்றார்
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார் (தென்பாகம்), அருள் (வடபாகம்), சிசில் (போக்குவரத்து), சப்&இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், போக்குவரத்து சப்&இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.