ஆந்திர மாநிலம் திருச்சானூர் காவல் ஆய்வாளர் திரு.சுரேந்தர்நாயுடு மற்றும் காவல்துறையினர் திருப்பதி- ஆர்.சி.புரம் ரோட்டில் ரோந்துசென்றனர். அப்போது அங்குள்ள விநாயகசாமி கோவில் பகுதியில் சந்தேகப்படும்படியாக 4 பேர் சுற்றித்திரிந்தனர். அவர்களின் நடவடிக்கைகளை கவனித்த போலீசார், அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சித்தூரை அடுத்த பலமேனரை சேர்ந்த ஷேக்அப்துல்காதர் (வயது 37), குண்டக்கல் அனந்தபுரம் பகுதியை சேர்ந்த எஸ்.முஸ்லீம் (24), மதனப்பள்ளியை சேர்ந்த ஹரிபாபு (35) மற்றும் மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியை சேர்ந்த ஷாதிக் ஹம்பர் இராணி (22) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 4 பேரும் கொள்ளை கும்பல் என்பதும், இவர்கள்மீது திருப்பதி, திருச்சானூர், அலிபிரி, பலமனேர், கங்காவரம், மதனப்பள்ளி காவல் நிலையங்கள் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 48-க்கும் அதிகமான கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் அவர்கள் திருச்சானூர் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டி பதுங்கி இருந்தபோது காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட 4 கொள்ளையர்களிடம் இருந்தும் 1 கிலோ 661 கிராம் எடையுள்ள சுமார் 200 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளும் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும்.
இதைத்தொடர்ந்து, ஷேக் அப்துல்காதர் உள்ளிட்ட 4 கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து திருப்பதி எஸ்.பி. ஜெயலட்சுமி, கொள்ளை கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 200 பவுன் நகைகள் மற்றும் வழக்குகள் குறித்து விளக்கினார்.
மேலும், பிடிபட்ட கொள்ளையர்களின் கூட்டாளிகள் 5 பேரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.