திருச்சி : திருச்சி மாவட்ட தொழில் மையத்திலும், மேலாளர் வீட்டிலும் நேற்று முன்தினம் அதிரடி, சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் , 9 லட்சம் ரூபாய் ரொக்கம், 52 பவுன் நகைகள், 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள், மற்றும் 3 லாக்கர் சாவிகளை கைப்பற்றினர். திருச்சி மாவட்ட தொழில் மையத்தில், தொழில் முனைவோர் கொடுக்கும், திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க, அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு, புகார் சென்றது. நேற்று முன்தினம் மாலை, டி.எஸ்.பி.,திரு. மணிகண்டன், தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் , மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், திடீர் சோதனை நடத்தினர்.
இரண்டு மணி நேரம் நடந்த, அதிரடி சோதனையில், தொழில் மைய மேலாளர் ரவீந்திரன் அறையில் இருந்தும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் கம்பன், ஆகியோரிடம் இருந்தும், கணக்கில் வராத 3 லட்சம் ரூபாயை, காவல் துறையினர் , கைப்பற்றினர். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, திருச்சி, உறையூரில் உள்ள ரவீந்திரன் வீட்டிலும், திருவெறும்பூரில் உள்ள கம்பன் வீட்டிலும், காவல் துறையினர் , சோதனை நடத்தினர். இதில், 6.80 லட்சம் ரூபாய் ரொக்கம், 52 பவுன் தங்க நகைகள், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, முதலீட்டு ஆவணங்கள் உட்பட 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் 3 லாக்கர் சாவிகளை கைப்பற்றி உள்ளனர். அடுத்தகட்டமாக, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் , லாக்கர்களை திறந்து, சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.