திருச்சி : திருச்சி பொன்மலைப்பட்டி, அமுல்நகரை சேர்ந்த திரு.சதீஷ், என்பவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வந்த நகை விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.80,000/-க்கு நகை ஆர்டர் செய்து அந்த பணத்தை அனுப்பியதாகவும், ஆர்டர் செய்த பொருள் வந்து சேரவில்லை ,என்பதால் இழந்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரியும், திருச்சி தென்னூர், ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த திருமதி.நேஷா, என்பவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து iphone வாங்குவதற்காக ரூ.3,000/- பணத்தை கட்டியதாகவும் ஆனால் பொருள் வந்து சேரவில்லை, என்பதால் இழந்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரியும், திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகாநகரை சேர்ந்த ராகவேந்தர், என்பவர் Flipkart ல் ஆன்லைன் மூலமாக அலைபேசியை ரூ.58,049-க்கு ஆர்டர் செய்துள்ளனர்.
பின்னர் அதனை ரத்து செய்து விட்டதாகவும், கம்பெனி விதிமுறைப்படி தனக்கு முழுத்தொகை வரவேண்டும் என்றும் ஆனால் ரூ.100/- மட்டுமே திரும்ப கிடைத்ததாகவும், மீதிபணம் ரூ.57,949/- வரவில்லை என்பதால் தனது பணத்தை மீட்டுத்தரக்கோரியும், NCRP-ல் ஆன்லைன் மூலமாக கொடுத்த புகார் மனுக்களை திருச்சி மாநகர ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அவர்களால் மேற்படி புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, முறைகேடாக நடைப்பெற்ற பண பரிவர்த்தனைகளை ஆராய்ந்ததில், முறைகேடாக பணபரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது. மேற்படி ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் புகார்தாரருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்மந்தப்பட்ட வங்கியின் Legal Department- க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,41,000/- திரும்ப சேர்க்கப்பட்டது.