கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் நித்தீஷ்(4). இவன் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தான்.
கடந்த 23–ந் தேதி மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய நித்தீஷ், வீட்டின் முன்பு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடினர். அப்போது வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறையில் நித்தீஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தான்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் திரு.ராஜாராம், திரு.ரமேஷ்பாபு, திரு.சுதாகர், உதவி-ஆய்வாளர் திரு.நடராஜன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நித்தீசின் உறவினர்கள், சித்தேரி கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் சித்தேரி கிராமத்துக்கு சென்று, நித்தீசின் தந்தையான முருகேசனிடம் விசாரணை நடத்தினார். அப்போது, உங்களுக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா? சமீபத்தில் உங்களுக்கும், யாருக்கும் தகராறு ஏற்பட்டதா? என்று கேட்டார். அதற்கு முருகேசன், முன்விரோதம் எதுவும் இல்லை என்றும், சமீபத்தில் பக்கத்து வீட்டு இளம் பெண்ணின் கள்ளக்காதல் பற்றி அவரது கணவரிடம் தெரிவித்தேன், அதனால் தகராறு ஏற்பட்டது என்றார்.
எனவே சிறுவன் நித்தீசை அந்த இளம்பெண் அல்லது அவரது கள்ளக்காதலன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. அந்த கோணத்தில் விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், தனிப்படைக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து 4 தனிப்படையினரும் அந்த கோணத்தில் விசாரணையை தொடங்கினர். பக்கத்து வீட்டு இளம்பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் தீவிரமாக கண்காணித்தனர். இதில் அந்த இளம்பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று காலையில் முருகேசன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமரின் மனைவி பரமேஸ்வரி(19) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதையடுத்து பரமேஸ்வரியை ராமநத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவன் நித்தீசை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பரமேஸ்வரி போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
எனது சொந்த ஊர் சித்தேரி கிராமம் ஆகும். எனது தந்தை பெயர் கோவிந்தராஜ். தாய் செல்லம்மாள். நான் சின்னசேலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த கூகையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பக்கத்து, பக்கத்து ஊர் என்பதால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம்.
இந்த காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு தெரிந்து விட்டது. காதலுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி நானும், அருள்ராஜியும் காதலித்து வந்தோம். இதற்கிடையில் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு, என்னை உறவினரான சித்தேரியை சேர்ந்த ராமர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணமான 3 மாதத்தில், எனது கணவர் ராமர் வேலை செய்வதற்காக சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.
இதனால் எனக்கும், அருள்ராஜிக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தோம். நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில், அருள்ராஜிக்கு போன் செய்து நேரில் வரவழைப்போம். இருவரும் வீட்டில் சந்தோஷமாக இருப்போம்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருள்ராஜ், எனது வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் இருவரும் வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். இதை முருகேசன் பார்த்துவிட்டார். உடனே சத்தம்போட்டு ஊரையே கூட்டிவிட்டார். மேலும் எனது கள்ளக்காதலான அருள்ராஜியை பிடித்து, கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இவை அனைத்தும் என் கண்முன்னே நடந்தது. அதுமட்டுமின்றி முருகேசன், சிங்கப்பூரில் உள்ள எனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, இங்கு நடந்ததை கூறிவிட்டார்.
இதில் ஆத்திரமடைந்த எனது கணவர் ராமர், சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சித்தேரிக்கு வந்தார். அவர் வந்ததும் என்னை கடுமையா கண்டித்தார். பின்னர் அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று விட்டார். எனது கள்ளக்காதல் விவகாரத்தை அம்பலப்படுத்திய முருகேசன் மீது எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். ஆனால் என்னால் அவரை, எதுவும் செய்ய முடியவில்லை. எனவே முருகேசன் அதிகமாக யாரிடம் பாசம் வைத்துள்ளார் என்று கண்காணித்தேன். அவர் தனது குடும்பத்தினரிடம் அதிகம் பாசம் வைத்திருந்தார். அதிலும் கடைசி குழந்தையான சிறுவன் நித்தீஷ் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததை நான் தெரிந்து கொண்டேன். எனவே அவனை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதன்படி கடந்த 23–ம் தேதி மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் நித்தீஷ் வீட்டுக்கு வந்தான். பின்னர் அவன் தனது நண்பர்களுடன் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். இதை நான் வீட்டில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நித்தீஷ் வீட்டில் யாரும் இல்லை. இதுதான் நித்தீசை கொலை செய்ய சரியான தருமணம் என நினைத்தேன். உடனே நித்தீசிடம் சென்று, பாசமாக பேச்சு கொடுத்தபடி, அவனது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்கு அழைத்துச்சென்றேன். பின்னர் நான், ஏற்கனவே தயாராக வைத்திருந்த பிளேடால் சிறுவன் நித்தீசின் கழுத்தை அறுத்தேன். அவனது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. சிறிது நேரத்தில் அவன் துடி, துடித்து இறந்தான். நித்தீஷ் இறந்ததை உறுதி செய்ததும், அவனது உடலை அங்குள்ள கழிப்பறையில் தூக்கிப்போட்டுவிட்டு சென்று விட்டேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல இருந்தேன். ஆனால் காவல்துறையினர் எப்படியோ என்னை கைது செய்துவிட்டனர்.
மேற்கண்டவாறு பரமேஸ்வரி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.