மதுரை : மதுரை மீனாட்சிநகர் பகுதியில், தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அனுப்பானடியை சேர்ந்த கார்த்திக் விஜயன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அங்கு வசூலாகும் பணத்தை வங்கிகளில், செலுத்தும் பணிகளில் தினமும் ஈடுபட்டு வருவார். சம்பவத்தன்று நிறுவனத்தில், வசூலான 55 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயுடன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து நிதி நிறுவனம் சார்பில், மாநகர காவல் ஆணையர், அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கார்த்திக் விஜயன், தனது மனைவி அழகுராணியுடன் கோத்தகிரியில், பதுங்கி வசித்து வந்தது தெரியவந்தது. உடனே காவல் துறையினர், அங்கு விரைந்து சென்று கார்த்திக் விஜயன், அவரது மனைவி அழகுராணி, மைத்துனர் ராஜேசுவரன் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதை தொடர்ந்து காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 51 லட்சத்து 16 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். கார்த்திக் விஜயன், அவரது மனைவி, மைத்துனர் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில், அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி