தமிழக பட்ஜெட் இன்று துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதில் காவல்துறைக்கு 7 ஆயிரத்து 877 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் விதமாக, சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் செயல்படுவதாக கூறினார்.
2011 ஆம் ஆண்டு முதல், 671 கோடி ரூபாய் செலவில் காவல் நிலையங்களுக்கான கட்டடங்கள் உட்பட புதிய கட்டடங்களும், 1,659 கோடி ரூபாய் செலவில் குடியிருப்புகள் கட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2018-2019 ஆண்டில் காவல் துறையின் பல்வேறு பயன்பாடுகளுக்காக 35 கட்டங்களுடன் 15 காவல் நிலையக் கட்டடங்களும், 543 குடியிருப்புகளும் 217.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிப்பதற்காகவும், குற்றங்களைத் தடுப்பதற்காகவும், காவல் துறைக்கு போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான வாகனங்கள் மற்றும் நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், கூடுதல் வாகனங்களையும், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்கான நவீன கருவிகளையும் 2017-2018 ஆம் ஆண்டில் 98.18 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு வழங்கியுள்ளது.
முதலமைச்சரின் காவலர் விருதுகளின் எண்ணிக்கை, 2018-2019 ஆண்டு முதல் 1,500-ல் இருந்து 3,000 ஆக உயர்த்தப்படும்.
இணையவழி குற்றங்களைத் திறன்படக் கண்டறிய, அனைத்து மாவட்டங்களிலும் ஆணையரகங்களிலும் தலா ஒரு இணையவழி குற்றத்தடுப்பு காவல் நிலையம்; 23.28 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், காவல் துறைக்கு 7,877.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
நவீனக் கருவிகளை தொடர்ந்து வழங்கி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை இந்த அரசு நவீனப்படுத்தி வருகிறது. வரும் நிதியாண்டில் 28.23 கோடி ரூபாய் மதிபபீட்டில், 20 இடங்களில் தீயணைப்பு நிலையக் கட்டடங்கள் கட்டப்படும்.
இது தவிர, மணலியில் 18.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீயணைப்புப் படை குடியிருப்புகள் அமைக்கப்படும்.
2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 347.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள்
குற்றவாளிகள் தங்களைத் திருத்திக்கொள்வதற்கான சூழ்நிலையை அமைத்துத் தரும் இடமாக சிறைச்சாலைகள் அமைந்து, அவர்கள் விடுதலை பெற்றபின் சமுதாயத்துடன் ஒன்றிணைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையான திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சிறைத் துறைக்கு 306.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.