சென்னை: தேசிய அளவில் காவலர்களுக்கான 61–வது திறன் போட்டி சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சியகத்தில் கடந்த 24–ந் தேதி தொடங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் போட்டியை தொடங்கிவைத்தார். 21 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் 7 மத்திய காவல் படைகளை சேர்ந்தவர்கள் என சுமார் 1500 பேர் இதில் கலந்து கொண்டனர். 140 மோப்ப நாய்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டன. போட்டியின் நிறைவு விழா வண்டலூரில் நேற்று மாலை நடந்தது.
தமிழக காவல் டி.ஜி.பி. திரு.டி.கே.ராஜேந்திரன் வரவேற்றார். தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு 14 தங்க பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக காவல் அணிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதுதவிர போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பதக்கம் அணிவித்தார்.
சட்டம்–ஒழுங்கை அடிப்படையாக கொண்டுதான் நாட்டில் அமைதி, மகிழ்ச்சி, வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. சட்டம்–ஒழுங்கை பேணி காக்கும் பணி உன்னதமான ஒன்றாகும். பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், காவல்துறையினர் அல்லும், பகலும் அயராது மக்கள் பணியாற்றி கொண்டிருப்பதால் தான், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு காவல்துறையினரின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான காவல் நிலையங்கள் உள்ளன. கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் சென்னை நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இருந்து வருவதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை இருந்து வருவதாகவும் தேசிய ஆவண காப்பகம் அறிவித்து உள்ளது. இது, தமிழக காவல்துறைக்கு கிடைத்த பெருமையாகும்.
கண்ணியம், உறுதி, நேர்மை, விழிப்பு, மனிதநேயம், கடமை உணர்வு ஆகியவற்றுடன் பணியாற்றும் நீங்கள் (காவலர்கள்), நவீன தொழில்நுட்பம் பற்றி நன்கு அறிந்துகொண்டு, அதன் துணையுடன் வழக்குகளை கையாண்டு, மென்மேலும் திறம்பட மக்கள் பணியாற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின்பு, தமிழக காவல்துறையினரின் சாகச நிகழ்ச்சி நடந்தது. விழாவில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்பட உயர் காவல் அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.