சென்னை: ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமலும், இரவு பகல் பாராமலும் கடமையில் ஈடுபட்ட தமிழக காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுக்கு நல்லடக்கம் எந்த வித சட்ட ஒழுங்கு பிரச்னையுமின்றி மிக அமைதியாக அரசு மரியாதையுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விடுப்பில் சென்றிருந்த போலீஸார் அனைவரும் உடனடியாக மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரையில் பணியில் இருக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னையில் 15,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் வெளிமாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், இளைஞர் படையினர், அதிவிரைவு படையினர், அதிரடிப் படை உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் சென்னைக்கு வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதே போன்று தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு நாட்களாக சாலையில் வைத்தே உணவுகளை சாப்பிட்டும், சாலையிலேயே ஒய்வு எடுத்தும் இரவு பகலாக பணி செய்தனர்.
இந்நிலையில், காவல் துறையினரின் இந்த அர்பணிப்பு மிகுந்த பணியை பொதுமக்களும், பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தை அமைதிப் பூங்காவாகவே இருக்கச் செய்த காவல் துறைக்கு நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏராளமான மீமஸ்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
திரைப்பிரபலங்கள் பலரும் போலீஸாரின் பணியை பாராட்டி வருகின்றனர். இது குறித்து நடிகர்கள் சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ள கருத்து:
கனிமொழி எம்.பி.: இந்த இடர்பாடுகள் மிகுந்த நேரத்தில், தமிழக காவல்துறையின் போலீஸார், பெண் போலீஸாரின் பணிகளை மறக்க முடியாது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்: கற்பனை கூட செய்து பார்க்கமுடியாததை செய்த தமிழ்நாடு காவல்துறையை வணங்குகிறேன்.
குஷ்பு: தமிழ்நாடு காவல்துறையையும், பொது மக்களையும், தொண்டர்களையும் நினைத்து பெருமைப்படுகிறேன். நிதானத்தைக் கடைபிடித்து மறைந்த முதல்வருக்கு மிகச் சரியாக பிரியாவிடை தந்தீர்கள். கண்டிப்பாக அவர் இதை விரும்பியிருப்பார். புன்னகைத்திருப்பார்.
ஜி.வி.பிரகாஷ்: இந்த கடினமான சூழலில், தன்னலமற்ற, கடின உழைப்பைத் தந்த தமிழக காவல்துறைக்கு மிகப்பெரிய வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இயக்குநர் கெளதம் மேனன்: மாநிலத்துக்காக சரியாக காவலில் நின்ற துறைக்கு வணக்கங்கள். தமிழ்நாடு காவல்துறை தான் மிகச்சிறந்தது.
எஸ்.வி.சேகர்: சரியான திட்டமிடலுக்கும், செய்ல்படுத்தலுக்கும் தமிழக காவல்துறைக்கும், ஐபிஎஸ் ஜார்ஜுக்கு வாழ்த்துகள்.
திவ்யதர்ஷினி: சட்டம் – ஒழுங்கை பாதுகாத்த தமிழக காவல்துறைக்கு என் வணக்கங்கள். மிகப்பெரிய பலம். ஒழுக்கத்துடன் இரங்கல் தெரிவித்தது, தூக்கத்தில் இருந்தாலும் அம்மாவின் சக்தியை காட்டியது.
அருண்விஜய்: மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு நிரூபித்துவிட்டது. இந்த சூழலை அமைதியாக கையாள ஒத்துழைத்த நமது மக்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. தமிழக காவல்துறைக்கு எனது வணக்கங்கள்!!
மடோனா செபஸ்டின்: மாநிலத்துக்குள் அமைதியைப் பேண அயராது உழைத்த தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு என் வணக்கங்கள்.
பாலசரவணன்: நமது மக்களின் பாதுகாப்புக்கும், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு அமைதியாக நடக்கவும் உறுதுணையாயிருந்த தமிழக காவல்துறைக்கு நன்றியும், வணக்கங்களும்.
இயக்குநர் கார்த்திக் ராஜூ: தமிழக காவல்துறைக்கு வணக்கங்கள். அவர்கள் இன்று சாப்பிடார்களா இல்லையா என்று தெரியவில்லை. அடிப்படை இயற்கை உபாதைகளை எப்படி சமாளித்தார்கள் எனத் தெரியவில்லை. கண்டிப்பாக அவர்களைப் பற்றி நினைவுகூர வேண்டும். மரியாதை கூடியுள்ளது
ஒளிப்பதிவாளர் திரு: மறைந்து முதல்வரின் கடைசி பயணம் அமைதியாக நடக்க, இரவு – பகல் பாராது உழைத்த தமிழக காவல்துறைக்கு என் வணக்கங்கள்.
நடிகர் விவேக்: ஊண் உறக்கமின்றி அயராது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறைக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்.
விஷால்: ஜெயலலிதாவின் உடல் மிக அமைதியான முறையில் நல்லடக்கம் செய்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஆண், பெண் காவலர்களுக்கு எனது மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவிக்கிறேன்.
விக்ரம் பிரபு: போலீஸ் என்றலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் எண்ணத்தை, மாற்றி நீங்கள் தான் சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.
காவல்துறைக்குக் கிடைத்த பாராட்டுகளில் சில:
* காவல்துறை மீது எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும்… இந்தப் படங்களே விளக்கிடும் அவர்கள் செய்யும் தியாகங்களை…
* தமிழ்நாட்டில் அமைதி நிலைநாட்ட இரவு பகல் பாராமல் கண்விழ்த்த காவல்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்…
* எவ்ளோ சல்யூட் அடிச்சாலும் பத்தாது, தமிழக காவல்துறை.
* ஒரு பூ கூட அதிராமல் 36 மணி நேரமாய் கண்ணுறங்காமல் கவனமாய் பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறை இதயங்களுக்கு கோடான கோடி நன்றியை சமர்ப்பிப்போம்.
* ஆயிரம் எதிர்மறைகள் இருப்பினும் வெள்ளம், கலாம், ஜெ. இறுதி நிகழ்வுகள் என தன் அசாதாரண உழைப்பால் கணக்கை நேர் செய்துகொள்கிறது காவல்துறை!