தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி என்னும் ஆழிபேரலை எச்சரிக்கை ஒத்திகை பயிற்சிகள் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இத்தகைய ஒத்திகை பயிற்சியால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்திய கடல்சார் தகவல் மையத்தில் உள்ள இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பின் மூலம் அனைத்து கிழக்கு கடலோர பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் இந்தியப் பெருங்கடல் அலை 2018 என்ற பெயரில் தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.
இந்த மாதிரியான பயிற்சி இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள இந்தியா உட்பட 24 நாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
சென்னை- கன்னியாகுமரி- நாகப்பட்டினம் – புதுக்கோட்டை – ராமநாதபுரம்
சென்னை சீனிவாசபுரம் பனையூர்குப்பம் அய்யம்பேட்டை, சிலாம்பிமங்களம், கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் -லீபுரம்-கொட்டில்பாடு – லட்சுமிபுரம், நாகப்பட்டினம் பிரதாமராமபுரம், சாத்தான்குடி, புதுக்கோட்டை பொன்னகரம், மீமிசல் – ஆர்.புதுப்பட்டினம், ராமநாதபுரம் திருப்பாலைக்குடி, கன்னிராஜபுரம் ஆகிய இடங்களில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வேம்பார், இனிகோ நகர் படுகப்பட்டு, தஞ்சாவூர் ராஜமடம் கீழத்தோட்டம், சோமநாதபட்டினம் ஆகிய இடங்களில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ள வேண்டிய அவசர கால நடவடிக்கை குறித்த ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடத்தப்பட்டது. அதன்படி, திருப்போரூர் வட்டம், கானாத்தூர்ரெட்டி குப்பம், செய்யூர் வட்டம்-கடலூர் கிராமம், பெரியகுப்பம் பகுதிகளில் ஒத்திகை நடைபெற்றது.
திருநெல்வேலி, திருவள்ளூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம்
திருநெல்வேலியில் கூட்டாபுளி, குட்டம்பனை, திருவள்ளூரில் பழவேற்காடு ஓபசமுத்திரம், திருவாரூர் துரைக்காடு (கோவிலன் தோப்பு), தில்லைவிலகம் (செங்கன்காடு), விழுப்புரத்தில் நடுக்குப்பம் – வானூர், மந்தவாய்புதுக்குப்பம் ஆகிய கிராமங்களிலும் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பயிற்சியில் தேசிய- மாநில பேரிடர் மீட்புப்படை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்பு, சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, போக்குவரத்து, ஊரக வளர்ச்சி, பொதுப் பணித் துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கடற்படை, கடலோரப் பாதுகாப்புப்படை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் 5,054 கிராம மக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் தகவல் மையம் அமைக்கப்பட்டது. அதில், மீட்புக் குழுவினருக்கு தேவையான மோட்டார் இயந்திரத்துடன் கூடிய படகுகள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.
வாகனங்கள் மூலம் சுனாமி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுனாமி வருவதற்கு முன்பாக முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பின்பு வாகனங்கள் மூலம் கானாத்தூர்ரெட்டி குப்பம் பொதுமக்களை ஏ.எம்.இ.டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு மையத்திலும், கடலூர் பெரியகுப்பம் மக்களை கடலூர் கிராம புயல் பாதுகாப்பு மையத்திலும் தங்க வைத்தனர்.
சுனாமி வந்த பிறகு, தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவின் உதவியோடு கடலிலும், வீட்டின் மாடியிலும், இடிபாடுகளிலும் சிக்கி உயிருக்குப் போராடியவர்கள் மீட்கப்பட்டனர்.
108 ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு மையத்துக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.